திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மேலும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.தி.மு.க.வைச் சேர்ந்த வீர.இளவரசன் மாரடைப்பால் இறந்தார். இதனால், இந்த தொகுதியில் ஜனவரி 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
மனு தாக்கல் செய்ய 22ஆம் தேதி கடைசி நாள். 23ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 25ஆம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். ஜனவரி 9ஆம் தேதி வாக்குப்பதிவும், 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகத்தில் (மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் உள்ளது) தாக்கல் செய்யலாம். மேலும் உதவி தேர்தல் அதிகாரியான திருமங்கலம் தாசில்தாரிடமும் மனு தாக்கல் செய்யலாம். தினசரி காலை 11மணி முதல் மாலை 3மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
தொகுதி தேர்தல் அதிகாரியாக நில சீர்திருத்தத்துறை உதவி ஆணையர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் போதும், பிரசாரத்தின் போதும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் போது 3 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். ஊர்வலமாக வரக்கூடாது. மேலும் மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உடன் இருக்க வேண்டும். அதேபோல் தேர்தல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும்.
பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். தனியாருக்கு சொந்தமான கட்டடங்கள், சுவர்கள் ஆகிய இடங்களில் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று தான் பேனர்கள் வைக்க வேண்டும். மறு கட்சியினர் செய்த விளம்பரங்களை அழிக்கவோ, அகற்றவோ கூடாது. வேட்பாளர்கள் ஜாதி, மதங்களை பற்றி பேச கூடாது என்று தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.