மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (டிசம்பர் 15) தொடங்குகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 9ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நாளை (டிசம்பர் 15) தொடங்குகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் காலை 11 மணி முதல் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.
மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரான மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மேலும் உதவி தேர்தல் அதிகாரியான திருமங்கலம் தாசில்தாரிடமும் மனு தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு பரிசீலனை மற்றும் திரும்ப பெறுதல் ஆகியவை மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகத்தில் செய்யப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 22ஆம் தேதி கடைசி நாளாகும். இதில் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் அன்று மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.
திருமங்கலம் தொகுதி ம.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் வீர.இளவரசன். இவர் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.