சென்னை புழல் ஏரியில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவையடுத்து, அணையை சீரமைக்க ரூ.25.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
புழல் ஏரியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், புழல் ஏரியில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு புதியதாக தற்போது ஏற்பட்டவை அல்ல என்றும் 14 அடிக்கு மேல் தண்ணீரை நிரப்பும் போது எல்லாம் இப்படிப்பட்ட நீர் கசிவு நீண்ட நாட்களாகவே ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த நீர் கசிவால் அணைக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்றாலும் நீர் கசிவு தொடர்ந்து இருக்கக்கூடாது என்றும் நீர் கசிவை புதிய முறையில் சீர் செய்ய திட்டம் தீட்டி உள்ளதாகவும் இதற்காக ரூ.25 கோடியே 74 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கான பணிகள் அணையின் நீர் மட்டம் குறைந்ததும் உடனடியாக தொடங்கப்படும் என்று கூறிய அமைச்சர் துரை முருகன், அடுத்த ஆண்டுக்குள் இந்த பணி முடிக்கப்பட்டு உடனடியாக சரிசெய்யப்படும் என்றார்.