ஓய்வு இல்லாமல் பாதுகாப்பு பணி கொடுத்ததால்தான் காவலர் சந்திரன் இறந்து விட்டதாகவும், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், காவலர் சந்திரன் உடலை பார்க்க வராததைக் கண்டித்தும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
திருண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக வந்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் சந்திரன் (56) என்பவர் இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
கடந்த 8ஆம் தேதி இரவு முதல் இவர் தொடர்ச்சியாக கிரிவல பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று அதிகாரிகளிடம் விடுமுறை கேட்ட காவலர் சந்திரனுக்கு, விடுமுறை கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஏட்டு சந்திரனின் திடீர் மறைவால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) பாலகிருஷ்ணன் விரைந்து வந்து காவலர் சந்திரன் உடலை பார்த்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்ட காவலர்கள் அவரை முற்றுகையிட்டு, ஓய்வு இல்லாமல் பாதுகாப்பு பணி கொடுத்ததால் தான் காவலர் சந்திரன் இறந்து விட்டதாகவும், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், காவலர் சந்திரன் உடலை பார்க்க வரவில்லை என்றும் கூறினர்.
பின்னர் அவர்களை சமாதானப்படுத்த முயன்ற கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் நேரில் வந்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என காவலர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ், திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். அதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
காவலர்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.