தற்போதைய அரசியல் சூழலில் நடைபெற இருக்கின்ற திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டது. ம.தி.மு.க. வேட்பாளர் வீர.இளவரசன் வெற்றி பெற்றார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 11ஆம் தேதி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நடைபெற இருக்கின்ற திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. போட்டியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுவதாகவும், அப்படிப் போட்டியிடுவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சம்மதத்தையும் ஆதரவையும் நல்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மறுமலர்ச்சி தி.மு.க.வின் தலைமை நிர்வாகிகள், முன்னணியினரோடு கலந்து ஆலோசித்ததில், தற்போதைய சூழலில் நடைபெற இருக்கின்ற திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு அளிப்பது என்றும், வெற்றிக்கு மிகுந்த முனைப்புடன் பணி ஆற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று வைகோ கூறியுள்ளார்.