விழுப்புரம் அருகே சரியான நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் அனந்தபுரி விரைவு ரயில் விபத்தில் இருந்து தப்பியது.
விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் பகுதியில் இன்று அதிகாலை 5.05 மணிக்கு தண்டவாளத்தை ஊழியர்கள் சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். 15 நிமிடத்தில் இந்த விரிசல் சரி செய்யப்பட்டது.
வழக்கமாக 5.30 மணிக்கு இந்த வழியாக அனந்தபுரி விரைவு ரயில் சென்னை செல்லும் என்பதால் உடனடியாக விரிசல் சரி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சரியாக 5.30 மணிக்கு அந்த வழியாக அனந்தபுரி விரைவு ரயில் சென்றது.
சரியான நேரத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.