''தமிழகத்தில் மழை பாதிப்புக்கு நிவாரண உதவிகள் வழங்க ரூ.3,789 கோடியும், இதில் ரூ.2,105 கோடி உடனடி நிவாரண உதவி வழங்கவும் தமிழக அரசு கேட்டுள்ளது என்று மத்திய குழுத் தலைவர் ஸ்கந்தன் கூறினார்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட 9 பேர் கொண்ட மத்திய அதிகாரிகள் குழுவினர், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியையும், பின்னர் தலைமைச் செயலாளர், அரசுத்துறை அதிகாரிகளையும் சந்தித்து பேசினர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளருமான ஸ்கந்தன், மழையால் 6 மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதை பார்த்தோம். தமிழகத்துக்கு என்னென்ன உதவிகள் கிடைக்க வேண்டுமோ அவை கிடைக்க உதவுவோம்.
இந்த குழு தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது. பாதிப்புகள் குறித்து பரிந்துரை மட்டும்தான் செய்ய முடியும். மழை சேத நிவாரணம் வழங்குவதில் மாநில அரசும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.
மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்தது போல், இங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட பலதரப்பினரையும் சந்தித்தோம். பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து எல்லோரும் விவரமாக தெரிவித்தனர். கடைமடையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பயிர், வீடுகள் பாதித்துள்ளன. பெரும்பாலான மக்கள் இன்னும் முகாம்களில் தங்கி உள்ளனர்.
தமிழக அரசும் அதிகாரிகளும் மக்களுடன் இணைந்து நல்ல முறையில் உதவி செய்துள்ளனர். இல்லையெனில், பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். உடனடியாக வழங்க வேண்டிய உதவிகள் குறித்து பரிந்துரை செய்வோம். நிரந்தர தீர்வுக்கு அந்தந்த துறைகளை அணுகி அந்த துறையின் மூலம் திட்டங்களை செயல்படுத்தவும் தெரிவிப்போம்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிகளவில் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றனர். அவர்களின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்தோம். தமிழக அரசு கொடுத்த அறிக்கையில் ரூ.3,789 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதில் ரூ.2,105 கோடியை இடைக்கால நிவாரணத் தொகையாகவும், நிரந்தர தொகையாக ரூ.1,683 கோடியை தரவேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
மாநில அரசு கேட்கும் நிதி அனைத்தையும் தந்துவிடமுடியாது. மத்திய அரசு நெறிமுறைகளின்படி, சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. பணக்கார விவசாயிகள், பயிரை இன்சூர் (காப்பீடு) செய்திருப்போர் போன்றோர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,000 முதல் ரூ.15 ஆயிரம் வரை உதவி வழங்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். நிவாரண உதவியை உயர்த்தி வழங்க நிச்சயம் பரிந்துரை செய்வோம். வெள்ள சேதம் குறித்த அறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என்று ஸ்கந்தன் கூறினார்.