''
சாலை மறியலில் கைது செய்யப்பட்டவர்களை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர் மாவட்ட விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள நிவாரண தொகையை உயர்த்தக் கோரியும், நிவாரணப் பணிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க கோரியும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், அ.தி.மு.க, ம.தி.மு.க கட்சிகளை சேர்ந்தவர்களும் சாலை மறியலில் கலந்து கொண்டனர். சாலை மறியலில் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.
மறியலின்போது கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.