திருவண்ணாமலை : கார்த்திகை தீப திருநாளான இன்று மாலை, திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீபத்தை வழிபட்டனர்.
மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை காண்பதற்காக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "அண்ணாமலைக்கு அரோஹரா" என்று கூறி பயபக்தியுடன் தீபத்தை தரிசித்தனர்.
ஆயிரக்கணக்கான கிலோ நெய் மற்றும் சூடம் நிரப்பப்பட்ட பெரிய செம்பு பாத்திரத்தில் மூழ்கடிக்கப்பட்ட 300 மீட்டர் நீளமுள்ள திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபத்தை அப்பகுதியை சுற்றியுள்ள 35 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களில் இருந்தும் காண முடியும்.
மகா தீபத்தைக் காண்பதற்காக லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளதால் திருவண்ணாமலை, பக்தர் வெள்ளத்தில் தத்தளித்தது.
11 அடுக்கு கோவில் கோபுரத்தில் ஏராளமான அகல் விளக்குகளிலும் தீபம் ஏற்றப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டிருந்ததால் கோவில் மிகவும் பிரகாசமாக காட்சியளித்தது. இதையடுத்து பக்தர்கள் இன்று இரவு கோவிலைச் சுற்றி கிரிவலம் செல்ல இருக்கின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
முன்னதாக அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. அண்ணாமலையாருக்கு வைர கீரிடமும், தங்க கவசமும் சாத்தப்பட்டது.
பிரதோஷ நந்தி சிலை அருகே பஞ்ச தீபங்கள் ஏற்றப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இறைவன் ஒருவனே என்பதை குறிக்கும் வகையில் பஞ்ச தீபங்களையும் ஒரே தீபமாக (பரணி தீபம்) ஏற்றினர்.
மகா தீபத்தையொட்டி, திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோயிலும், அண்ணாமலையார் மலையும் கமாண்டோ, அதிரடிப்படையினரால் கண்காணிக்கப்பட்டது.