தாம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றாத, குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எந்த விதமான மக்கள் நலப்பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் தலைவிரித்தாடும் குடிநீர்ப்பஞ்சம் குறித்து நகராட்சித் தலைவர் கவனம் செலுத்துவதில்லை என்றும், தாம்பரம் நகராட்சிப் பகுதிகளில் இருந்து எடுக்கப்படும் குப்பைகள் கன்னடபாளையம் என்ற குடியிருப்புப் பகுதியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால், சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக தோல், நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டும் அல்லாமல், 2000ஆம் ஆண்டு தாம்பரம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு மக்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டும், இத்திட்டம் துவக்கப்படவே இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
மக்கள் நலப் பணிகளை புறக்கணிக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும், அதற்கு உறுதுணையாக விளங்கும் தி.மு.க. அரசிற்கும் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், தாம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றாத, குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்காத, அத்தியாவசியப் பணிகளை செய்து தராத நகராட்சி நிர்வாகம், அதற்குத் துணை நிற்கும் தி.மு.க. அரசு ஆகியவற்றைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் வரும் 12ஆம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.