மகாகவி பாரதியாரின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், கதர்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஆர்.சி.மோகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில் கொண்டாட்டம்!
புதுச்சேரியில் பாரதி பூங்காவில் அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த விழாவில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மற்றும் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில் கட்சி அலுவலகத்தில் பாரதியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.