தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசுகிறார்கள்.
தமிழகத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் 177க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெல்டா மாவட்டங்களில் ஏராளமான பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கியது.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முதலமைச்சர் கருணாநிதி நிதியுதவி கோரினார். இதையடுத்து, மத்திய நிவாரண குழு தமிழகத்துக்கு கடந்த 7ஆம் தேதி வந்தது. அவர்க்ள இரண்டு குழுக்களாக பிரிந்து தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது.
நேற்றுடன் அனைத்து இடங்களையும் பார்வையிட்ட மத்திய குழுவினர் இன்று காலை சென்னை வந்தனர். வெள்ள நிவாரணத்தை பார்வையிட்டபோது தாங்கள் சேகரித்த விடயங்களை பற்றி, முதலமைச்சர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.