சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே கடந்த மாதம் நடந்த மோதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 மாணவர்கள் இன்று திடீரென கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கல்லூரியில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொடர்பாக அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியில் அம்பேத்கர் பெயர் சேர்க்கப்படாததால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
மாணவர்களின் மோதலை வேடிக்கைப் பார்த்ததாக காவல் துறையினர் இடை நீக்கம், பணியிடம் மாற்றம் என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. மோதலில் ஈடுபட்டதாக இதுவரை 43 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோதலின் போது படுகாயமடைந்த பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாத்துரை ஆகிய 3 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். அவர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனுவை உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகிய 2 மாணவர்களை காவல்துறையினர் இன்று திடீரென கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மாணவர்கள் மீதான இந்த திடீர் நடவடிக்கைக் குறித்து காவல்துறையினர் மேலும் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டநிலையில், மாணவர் பாரதி கண்ணனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.