வரும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து அமைச்சர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் இன்று மனுக்களை கொடுத்தனர்.
மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் ரூ.10,000 செலுத்தி டிசம்பர் 10ஆம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறும் பணி தொடங்கியது. அவைத் தலைவர் மதுசூதனன், சிறுபான்மையினர் பிரிவு செயலர் லியாகத் அலிகான் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட விருப்பம் தெரிவித்து முதல் நாளான இன்று 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மனுக்களை சமர்ப்பித்தனர்.
அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், மீனவர் பிரிவு செயலாளர் டி.ஜெயக்குமார், தம்பித்துரை, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜெயலலிதா பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட மனுக்களை கொடுத்தனர்.
மேலும், இந்த தேர்தலில் புதுமுகங்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கட்சித் தலைமை சுட்டிக்காட்டியுள்ளதால், கட்சியின் இளைஞரணி, ஜெயலலிதா பேரவை, தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவு நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் மனுக்கள் கொடுத்தனர்.
கட்சித் தொண்டர்கள் விண்ணப்பங்களை டிசம்பர் 27ஆம் தேதிவரை தாக்கல் செய்யலாம் என்றும் அதன் பிறகு கட்சித் தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்யும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.