சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, அந்நாட்டின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அருகே உள்ள இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தலைமையேற்று ஆற்றிய உரையில்,
"கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.12.08) வெளிவந்த சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ ஏடான 'சண்டே அப்சர்வர்' ஆங்கில நாளேட்டுக்கு சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா அளித்த பேட்டியில், தமிழக அரசியல் தலைவர்கள் அரசியல் கோமாளிகள் என விமர்சித்திருக்கின்றார்.
இது குறித்து இணைய தளங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்டு கொதித்துள்ளனர். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் போன்ற தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து நேற்று இந்திய அரசிடம் சிறிலங்கா அரசு இது குறித்து மன்னிப்பு கேட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இது ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை.
இச்செய்தி குறித்து அந்நாளேடு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அப்படி எனில் சரத் பொன்சேகா பேசியது உண்மை என்பது தெரியவருகிறது. இது குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா இருவரும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை எனில் இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
இதுவரை பாகிஸ்தான் மீது இந்தியா நான்கு தடவை போர் தொடுத்துள்ளது. அதேபோன்று, 1962 இல் சீனா மீது இந்தியா போர் தொடுத்தது. அந்நாட்டுப் போர் படைத் தளபதிகள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சித்ததே கிடையாது. ஆனால் சிறிலங்கா தரைப்படைத் தளபதி விமர்சித்திருப்பது இந்தியாவின் பலவீனத்தையே காட்டுகின்றது.
மேலும், தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அண்மையில் இந்தியா வந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மதிக்காமல், ஊடகவியலாளர்களிடம் போரை நிறுத்த முடியாது என்று பகிரங்கமாக பேசியுள்ளார்.இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று வலியுறுத்தினா வைகோ.
பிரதமருக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
பின்னர் பேசிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், "சிறிலங்கா தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா பேசியிருப்பது தமிழகத்தில் உள்ள தலைவர்களையும், ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள தலைவர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். இதுகுறித்து இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இந்தியாவில் ஈழப் படுகொலை குறித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் அவரை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேறுமாறு இந்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், அவர் இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்குச் சென்ற அடுத்த நிமிடமே அவர் உயிர் பறிக்கப்படும் என்பதால் அவர், தமிழகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவர் சிறிலங்காவுக்குச் சென்றவுடன் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்குப் பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி.மகேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலர் மல்லை சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.