திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் கோட்டம் சார்பில் இன்று முதல் 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குனர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை மஹா தீப திருவிழா நாளை வியாழக்கிழமையும், பவுர்ணமி கிரிவலம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இன்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (விழுப்புரம்) சிறப்பு பேருந்துகள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
சென்னை, தாம்பரம், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திண்டிவனம், கடலூர், திருக்கோவிலூர், செஞ்சி, வேலூர், காஞ்சிபுரம், ஓசூர், திருப்பத்தூர், சேலம் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் (விழுப்புரம்) லிமிடெட் சார்பில் 900 சிறப்பு விழாக்கால பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பேருந்துகளை பக்தர்களும், பொது மக்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.