சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் சட்டக் கல்லூரி தேர்வு இன்று நடைபெற்றது.
சென்னை பாரிமுனை அரசு அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களிடையே கடந்த மாதம் 12ஆம் தேதி மோதல் நடந்தது. இதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது.
இதற்கிடையே தமிழக சட்டக் கல்லூரிகளில் தேர்வு நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய பாதுகாப்புடன் சட்டக் கல்லூரிகளில் டிசம்பர் 10ஆம் தேதி தேர்வை நடத்த உத்தர விட்டது.
அதன்படி இன்று சென்னை பாரிமுனை அரசு அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றது. சட்டக்கல்லூரியில் மீண்டும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கல்லூரி வளாகம் முழுக்க ஆயுதம் ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தேர்வு எழுத வந்த அனைத்து மாணவர்களும் கடுமையாக சோதிக்கப்பட்டனர். அடையாள அட்டையைக் காட்டியப் பிறகே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.