இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி பொன்சேகாவை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
'தமிழக அரசியல் கோமாளிகள் சொல்வதை இந்திய அரசு கேட்காது' என்ற இலங்கை ராணுவ தலைமைத் தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும், இலங்கை தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரி டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்திருந்தார்.
அதன்படி இலங்கை ராணுவ தளபதியின் பேச்சை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் இன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ தலைமை தாங்கினார். அப்போது, சிங்கள ராணுவ தளபதிக்கு எதிராக கண்டன கோஷங்களை வைகோ எழுப்பினார். அவர் சொல்ல சொல்ல தொண்டர்களும் கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு துணை செயலர் மகேந்திரன், இலங்கை தமிழர் எம்.பி. சிவாஜிலிங்கம், எழுத்தாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.