மின்வெட்டு, சர்க்கரை ஆலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான மின்வெட்டு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி தொடங்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதே சமயத்தில் மின் உற்பத்தி துவங்குவதற்காக ஒவ்வொரு உறுப்பினரிடமும் கரும்பு டன் ஒன்றிற்கு 50 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு விட்டதாகவும் கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில், 11ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.