திராவிட இயக்கத்தில் இளமைக் காலந்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும்; பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிடத் தவறியதில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கலையில், இலக்கியத்தில், நாட்டுப்பற்றுக்கான தியாகத்தில் ஈடுபட்டு மறைந்து விட்டவர் குடும்பங்களின் வழித் தோன்றல்களைப் பெருமைப்படுத்துவதும்; அவர்களின் குடும்பம் வாடாமல் தழைத்திடச் செய்வதும் கடமையெனக் கொண்டு; ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆவன செய்து வருகிறேன் என்பதை நீயும் அறிவாய், இந்த நாடும் அறியும். இந்த அரும்பணியை மேற்கொண்டுள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்புகளாக அமைந்தவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். திராவிட இயக்கத்தில் இளமைக் காலந்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும்; பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிடத் தவறியதில்லை.
மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. அய்யர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா.கல்கி, ஏ.எஸ்.கே. அய்யங்கார், வெ.சாமிநாதசர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டை விரித்துரைக்க வேண்டுமென்றால், "அக்கிரகாரத்து அதிசய மனிதர்'' என்று "வ.ரா.'' அவர்களைச் சிறப்பித்து எழுத் தோவியம் தீட்டிய அறிஞர் அண்ணாவின் தம்பி என்ற முறையில் "வ.ரா.'' மறைந்த பிறகும், எழுத்துத்துறை பிதாமகன் எனப்படும் "சாவி'' மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன், நான்!
1990ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, வ.ரா. அவர்களின் துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்திற்கே அழைத்து வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பதற்கான ஆணையினை அவர்களிடம் ஒப்படைத்தேன். 17.8.1990 அன்று கலைவாணர் அரங்கில் வ.ரா. அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு சார்பில் கொண்டாடினோம்.
திருக்குறள் தந்த அய்யன் வள்ளுவனின் திருவுருவத்தைப் பலரும் பலவிதமாகச் சித்திரித்த நிலையில் ஒரே மாதிரி; அய்யனின் உருவத்தை வரைந்தளிக்க வேண்டுமென்ற பெருந்தமிழறிஞர்களின் கருத்தையேற்று; அனைவரும் ஒப்பும் வகையில் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை அழகுற தீட்டித் தந்து, அதனை அரசின் வாயிலாகப் பிரசுரிக்கும் வகையையும் வழங்கிய ஓவியப் பெருமகனார் வேணுகோபால் சர்மா அவர்களைப் பெருமைப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கும் நிதியை வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு.
17.2.1985 அன்று நான் எழுதிய "குறளோவியம்'' நூல் வெளியீட்டு விழாவிற்கு வேணுகோபால் சர்மா அவர்களை தேடிப் பிடித்து அழைத்து வரச் செய்து அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்த தொகையில் ரூபாய் பத்தாயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக வழங்குவதாகக் கூறி அளித்தேன். பின்னர் 1989ஆம் ஆண்டு வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் 24.5.89 அன்று என்னைச் சந்தித்துக் கூறியதும் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கியதுடன், 7.4.1990 அன்று அவருடைய குடும்பத்தாரைத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து அரசின் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கி மகிழ்ந்தேன்.
இப்போது கூட நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்கு "செம்மொழி''த் தகுதியை வழங்கிடுக எனக் கோரிக்கை வைத்த "பரிதிமாற்கலைஞர்'' என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டைப் புதுப்பித்து, வாழும் அவரது வழித் தோன்றல்களின் எதிர்காலத்துக்கான உதவிகளைச் செய்து, அவரது உற்றார், உறவினர், பேரன், பேத்திகள் நிரம்பிய பெருங் குடும்பத்தையும் சிறப்பித்தவன் நான்!
நான் முன்னின்று சிறப்பித்த, அன்பு பொழிந்த குடும்பங்கள்; பார்ப்பனச் சமுதாயக் குடும்பங்கள் மட்டுமல்ல; அரவணைப்பும், ஆதரவும் நல்கிய, பெருஞ்சித்திரனார் குடும்பங்கள் போலப் பலப்பல உண்டு. இளமையிலேயே நட்பினால் பிணைக்கப்பட்டு; நடுவில் அந்த நட்புக்கு இடைவேளை ஏற்பட்டு; கழகத்தின் கலையுலகக் காவலராக இருந்து; பின்னர் பெருந்தலைவர் காமராஜரின் தளபதியாக ஆன பிறகும் "தம்பீ; நீ எங்கிருந்தாலும் வாழ்க!'' என்று அண்ணா அவர்களால் வாழ்த்தப் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி மட்டும்; எங்கிருந்தாலும் எப்போதும் உன் இதயத்தில் இருப்பேன் என்று கூறி இப்போதும் என் இதயத்தில் இருப்போரில் ஒருவர் அல்லவா; அதனால் எங்களைப்பிரித்த கட்சி இடைவெளிகளைக் கடந்து; நிலைத்து விட்ட எங்கள் நட்பின் அடையாளமாகத் தான் இதோ அந்தக்குடும்பம் எனைச் சூழ்ந்து குலவிடும் காட்சியை இந்த நிழற்படம் விளக்குகிறது. மணவிழா அழைப்பு வழங்கிட செல்வன் பிரபுவும், பிரபுவின் பேரக் குழந்தை கணேசும்; குடும்பத்துச் செல்வங்களும் கூடி நிற்கும் இக்காட்சி; நல்ல குடும்பம்; பல்கலைக்கழகம் என்ற பாவேந்தரின் பாட்டுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறதல்லவா!
தமிழகக் கலைக் குடும்பத்தில் எனக்கு எத்தனை எத்தனை நண்பர்கள், எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள், எத்தனை எத்தனை வெற்றிகள், தோல்விகள், நட்பு, பகையெனும் நானாவித நிலைகள், அனைத்தையும் சந்தித்து கலைக் குடும்பம்; ஒன்றையொன்றை வாழ்த்தி மகிழ்கிறதல்லவா?
"மறப்போம், மன்னிப்போம்'' அரசியலில் மட்டுமல்ல; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போதித்த அண்ணா அவர்கள்; இதனையும் மனித நேயம் வளர்க்கும் இரண்டு மருந்து மாத்திரைகளாக நமக்கு வழங்கியுள்ளார் அல்லவா? அதன் வலிமை தான் இது!
மன்னித்து மறக்க வேண்டியது; "தீது'' எனும் ஒன்றைத் தான் என்பதை நான் தெரிந்து தெளிந்து நடப்பது போல்; உடன்பிறப்பே; நீயும் நடப்பாய் என்று நம்புகிறேன், நடக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இதற்கிடையே ஒரே நாளில்; 6.12.2008 சனிக்கிழமை; காலையில்; "தாத்தா எனக்கு பிறந்த நாள் இன்று, வாழ்த்து என்னை''யென்று அண்ணாவின் பேரன் மலர்வண்ணன் வரவே; என் மனத்தில் பன்னீர் தெளித்தது போன்ற உணர்வு, மழலையாக இருந்த போது "மலர், மலர்'' என்று அண்ணா அன்பு பொங்கிட கொஞ்சி மகிழ்வாரே; அந்த மலர்வண்ணன் மனைவியுடன், இந்தத் தாத்தாவிடம் வாழ்த்து பெற வந்த போதும் சிவாஜி குடும்பத்தினர், கொள்ளு பேரன் பேத்தியென மனமகிழ வந்து மணவிழா அழைப்பிதழ் தந்த போதும்;
"நமது'' குடும்பத்தில் உள்ள பேரன் பேத்திகளையும், கொள்ளுப் பேரன் பேத்திகளையும் சிதற விடாமல் குடும்பம் செழிப்புற்று தழைக்குமென்று பெரியோர் சொன்ன சொல் பலித்ததையும் எண்ணி மகிழ்கிறேன்.
இக்கடிதத்தில் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ள ஆன்றோர், சான்றோர், குடும்பங்களை ஆதரித்துப் போற்றியதன் பயன் இதுவென எண்ணி பெருங்குடும்பமாம் நமது கழகத்தின், உன் போன்ற உடன்பிறப்புகள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.