அமைதி பாதையில் வழி நடத்திச் செல்வோம்: தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து
, திங்கள், 8 டிசம்பர் 2008 (15:43 IST)
பக்ரீத் திருநாளில் ஒற்றுமை, அன்பு ஆகியவற்றை வளர்த்து நமது நாட்டை அமைதி, வளம், முன்னேற்ற பாதையில் வழி நடத்திச் செல்வோம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா : தியாகத் திருநாளாம் ஈத்உல் பண்டிகையையொட்டி தமிழகத்திலும், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த திருநாளில் ஒற்றுமை, அன்பு ஆகியவற்றை வளர்த்து நமது நாட்டை அமைதி, வளம், முன்னேற்ற பாதையில் வழி நடத்திச் செல்வோம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு : திருக்குரானில் அறிவுறுத்தியபடி 'குர்பானி' நாள் என்று தியாகத்தை சிறப்பிக்கும் வகையில் வசதி படைத்தோர் ஏழைகளுக்கு உதவுகிற ஒப்பற்ற பண்பும், ஈகைத் தன்மையும் இணைந்து ஒருவருக்கொருவர் பாசம், கருணை, சகோதரத்துவம் மலர கொண்டாடப்படுகிற ஒப்பற்ற திருநாள் இது.இப்புனித நாளில் அண்ணல் நபிகள் நாயகம் சமுதாயத்திற்கு வகுத்தளித்த அறநெறிகளை குறிப்பாக மனித குலத்தில் பகை உணர்வு இன்றி வன்முறையை ஒழித்து அனைவரும் அமைதி, சமாதான வாழ்வு பெற வேண்டும் என்ற அவரது அரிய போதனையை நினைவில் கொண்டு நாட்டில் மதநல்லிணக்கம் மேம்பட்டிட சாதி, மத, இன மொழிப் பிரிவுகள் கடந்து ஒற்றுமைக்கு வழி வகுப்போம்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் : பக்கத்து வீட்டுக்காரன் பட்டினி கிடக்கும் பொழுது, தான் மட்டும் வயிறு நிறைய சாப்பிடுகிறவனை இறை நம்பிக்கையாளனாகக் கொள்ள முடியாது என்பதும், ஈகை குணமற்ற அறிவாளியை விட, கல்வி அறிவற்ற தர்மவானே இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதும் நபிகள் நாயகத்தின் கட்டளைகள்.அந்தக் கட்டளைகளை நிறைவேற்றி மகிழ்வதற்கு வாய்ப்பு அளிக்கின்ற இந்தத் திருநாளில் வறியவர்களுக்கெல்லாம் உணவு அளித்து மகிழ்ந்து இறைத்தூதரின் கட்டளையை நிறைவேற்றுகின்ற இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றிட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ : உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள், தங்கள் மேலான கடமையும் ஹஜ் எனும் புனிதப் பயணத்தை மேற்கொண்டு, நிலம், இனம், மொழி, நாடு எனும் வரப்புகளை உடைத்து வெள்ளம் போல் மனிதர்கூட்டம், கள்ளம் கபடமின்றி உள்ளத்தில் ஒருவராய் மக்கமா நகரில் ஏகத்துவக் கடலில் சங்கமித்து மனித புனிதராய் மாற்றம் பெறும் நாள் இந்நாள்.
சமூக நல்லிணக்கத்தைப் பாழ்படுத்தவும், இரத்தக் களறிகளை விளைவிக்கவும் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களையும், சவாலையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ளவும் சகோதரத்துவத்தை காத்து சமூக நல்லிணக்கத்தையும் சாந்தியும் சமாதானமும் தழைக்கச் செய்யவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம். இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் : பிறருக்கு உதவுதல், பிறருக்காக உழைத்தல், பிறருக்காகத் தம்மை அர்ப்பணித்தல் போன்ற பண்பு நலன்களை மானுடம் போற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தவே ஈகைப்பண் பின் அடையாளமாக இத்தகையதொரு பண்பாட்டுத் திருவிழாவை இஸ்லாம் கொண்டாடி வருகிறது.இஸ்லாமியர்களின் பெயரால், மானுடத்திற்கெதிரான, மனித நேயமற்ற வன்முறை செயல்களை சில பயங்கரவாதக்கும்பல் முன்னெடுப்பது மனித நேயத்தின் வடிவமான இசுலாத்தைப் பழிப்பதாக அமைந்து விடுவதைக் காண முடிகிறது.ஆகவே, இஸ்லாமியச் சமூகத்தின் மீது திணிக்கப்படும் அவதூறுகளைத் துடைத்திட, மும்பையில் நடந்த பயங்கரவாத நடைமுறைகளைத் கண்டிப்பதும், அவற்றுக்கெதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் அணி திரள வேண்டியதும் மிக மிக இன்றியமையாதது என்பதை இந்த ஈகைத் திருநாளில் உணர்வோம். அதனை நடைமுறைப்படுத்த உறுதியேற்போம்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் : இந்த நன்னாளில் மனிதர்கள் உயிரைக் காப்பாற்றும் உணர்வோடு வாழ வேண்டும். மற்ற உயிர்களை மதித்துப் போற்றவேண்டும் என்ற இறைவனின் வழி காட்டுதலை உணர்ந்து நடந்து கொள்ள எல்லோரும் முயற்சித்து வெற்றி பெறுவோம் என்ற நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக முன்னேற்றக் கட்சி தலைவர் ஜெகத்ரட்சகன் : 'தியாகத்திருநாள் பக்ரீத்' இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்க்கையில் ஓர் உன்னதத் திருநாள். 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்' என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில், இருப்பதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து, சேர்ந்து உண்ணுகின்ற வழக்கம் வாழ்க்கையில் மண்ணுயிர் ஓம்பும் என்ற மானுட தத்துவத்தை காப்பதாக அமைகின்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லிக் மாநில பொதுச் செயலாளர் சையத் சத்தார் : தீவிரவாதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி தீவிரவாதச் செயலில் ஈடுபடுகின்றவர் இஸ்லாமிய கோட்பாடுகளை எதிர்த்தவர்கள் என்று உணர்ந்து இந்த நந்நாளிலே இந்திய நாடு நம் நாடு, இந்தியன் என்பது என் பேரு, எல்லா மக்களும் நம் உறவு என்ற சகோதர உணர்வோடு இந்த நந்நாளை கொண்டாட உறுதி கொள்வோமாக!
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் : "இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த தியாகப்பெருநாள் மூலம் பொறுமை, தூய்மை, தியாகம் போன்றவற்றை அனைத்து இன மக்களும் மதிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.