பாலக்காடு அருகே உள்ள கஞ்சிகோடு பகுதியில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழுந்தை மற்றும் 6 பேர் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் ஏற்றுமதி கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வந்த பிரேம்நாத், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவரது மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் தங்களது குழந்தைக்கு சோறூட்ட கேரளமாநிலம் குருவாயூர் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்களுடன் குழந்தை மிதுல்ராம், தாய் துளசி, மாமியார் நளினி, தங்கைகள், பானுப்பிரியா, ரேவதி ஆகியோரும் சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கார் பாலக்காடு அருகே உள்ள கஞ்சிகோடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருச்சூரில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில், காரில் தூங்கி கொண்டிருந்த உமாமகேஸ்வரி, அவரது கணவர் பிரேம்நாத், அவரது குழந்தை மிதுல்ராம், கார் ஓட்டுனர் உள்பட 7 பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ரேவதி மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
விபத்து பற்றி தகவலறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று ரேவதியை மீட்டு பாலக்காடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு பலியானர்வகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், லாரி ஓட்டுனர்கள் பழனிசாமி, மகேந்திரன், மற்றும் உடன் வந்த பெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.