இந்திய கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 42 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்களின் 8 விசைபடகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய கடலோர காவல் படையினர், கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை மீனவர்கள் 42 பேர் 8 விசைப்படகில் இந்திய கடல் எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த கடலோர காவல் படையினர் அவர்களின் படகை சுற்றி வளைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த 42 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் 8 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அண்மையில், பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கடல் வழியாக வந்த பயங்கரவாதிகள் மும்பை தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.