பெட்ரோல், டீசலின் விலை இன்னும் அதிக அளவிற்கு குறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதைச் செய்யவில்லை என்றும் மத்திய அரசின் இது போன்ற ஏமாற்றுச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அ.இ.அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அளவுக்கும், டீசலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அளவுக்கும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளதில் இருந்து, எந்த அளவுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
4.6.2008 அன்று கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 147 டாலர் அளவுக்கு அதிகரித்துவிட்டது என்ற காரணத்தைக் காட்டி, மத்திய அரசு பெட்ரோல் விலையை 5 ரூபாய் அளவிற்கும், அதாவது 50 ரூபாய் 52 பைசாவில் இருந்து 55 ரூபாய் 64 பைசாவாகவும்;
டீசல் விலையை 3 ரூபாய் அளவிற்கும், அதாவது 34 ரூபாய் 48 பைசாவில் இருந்து 37.44 பைசாவாகவும்; சமையல் எரிவாயு விலையை 50 ரூபாய் அளவிற்கும், அதாவது 288 ரூபாய் 10 பைசாவில் இருந்து 338 ரூபாய் 10 பைசாவாகவும் உயர்த்தியது.
தற்போது கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில், பேரலுக்கு 147 டாலரிலிருந்து சுமார் 43 டாலர் அளவுக்கு சரிந்திருக்கும் இத்தருணத்தில், பெட்ரோலின் விலை லிட்டருக்கு வெறும் 5 ரூபாய் என்ற அளவிலும், டீசலின் விலை லிட்டருக்கு வெறும் 2 ரூபாய் என்ற அளவிலும் குறைத்து மக்களை மத்திய அரசு பெரிதும் ஏமாற்றியுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவேயில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவுக்கு சரிந்திருக்கும் இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்னும் அதிக அளவிற்கு குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு, சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அதைச் செய்யவில்லை. மத்திய அரசின் இது போன்ற ஏமாற்றுச் செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை எவ்வளவாக இருந்ததோ, அந்த அளவிற்கு மீண்டும் கொண்டு வரும் வகையில் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.