வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து வருவதால் தமிழகம்- புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தென்கிழக்கே 900 கி. மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டிணம், சிறிலங்காவின் திரிகோணமலையில் இருந்து 600 கி.மீட்டர் தொலைவிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் தீவிரம் அடைந்து, மேற்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதால் அடுத்த 72 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, வட சிறிலங்க கடலோரப்பகுதிகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழக கடலோரத்தை நெருங்கி வருவதால் கிழக்கு, தென்கிழக்கு திசை நோக்கி 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்காற்று வீசும் என்றும் கடலோரப் பகுதிகளில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
எனவே தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.