சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவத்தில் தொடர்புடைய 26 மாணவர்களின் பிணைய விடுதலை மனுவையும், முன்பிணைய விடுதலை கேட்ட 3 பேரின் மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் (Principal Sessions Court) நேற்றிரவு தள்ளுபடி செய்தது.
சென்னை சட்டக் கல்லூரியில் 2 பிரிவு மாணவர்களுக்கிடையே கடந்த 12ஆம் தேதி பயங்கர மோதல் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 26 பேர் தங்களுக்கு பிணைய விடுதலை வழங்கக் கோரியும், 3 பேர் முன் பிணைய விடுதலை கேட்டும் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் நேற்றிரவு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் ஷாஜகான் வாதிடும்போது, ''சட்டக் கல்லூரியில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று மனுதாரர்கள் கோருகிறார்கள். தேர்வு நடந்தபோதுதான் இந்த மோதலே வந்துள்ளது. தேர்வு பற்றி அவர்கள் பேசக்கூடாது. உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைதியாக தேர்வு நடக்க வேண்டுமானால், மனுதாரர்கள் அனைவரும் பிணைய விடுதலையில் வரக் கூடாது'' என்றார்.
இதன்பின் நீதிபதி தேவதாஸ் அளித்த தீர்ப்பில், இந்த மாணவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இவர்கள் ஈடுபட்டதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாலும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும் 26 மாணவர்களுக்கும் பிணைய விடுதலை வழங்க முடியாது. இதே போல முன்பிணைய விடுதலை கேட்ட 3 பேரின் மனுவையும் நிராகரிக்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
இதுதவிர, சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் 14 பேரின் பிணைய விடுதலை மனுவையும், காவல்துறை உதவி ஆணையர் தாக்கப்பட்ட வழக்கில் 18 மாணவர்களின் முன் பிணைய மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.