மக்களவை தேர்தலில் கூட்டணி: ஜெயலலிதா- பிரகாஷ் காரத் கூட்டாக அறிவிப்பு
, வெள்ளி, 5 டிசம்பர் 2008 (15:17 IST)
மக்களவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று ஜெயலலிதாவும், பிரகாஷ் காரத்தும் கூட்டாக தெரிவித்தனர்.மக்களவை தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலர் பிரகாஷ் காரத் சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜெயலலிதா கூறுகையில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் இந்த சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதனும் கூட்டணி பற்றி எங்களுடன் பேசி இருக்கிறார் என மேலும் அவர் கூறினார்.பா.ம.க. போன்ற கட்சிகள் உங்கள் கூட்டணியில் சேருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயலலிதா, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
இதைத் தொடர்ந்து பிரகாஷ் காரத் கூறுகையில், தற்போது நாட்டில் உள்ள நிலவரம், தீவிரவாதம், இலங்கைத் தமிழர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாங்கள் விரிவாக பேசினோம் என்றார்.
அ.இ.அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்த காரத், பிரதமர் வேட்பாளர் யார் என்பது பற்றி எதுவும் பேசவில்லை என்றார்.
மேலும் தெலுங்குதேசம், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்றார்.