Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒது‌க்‌கீடு: கருணாநிதி

வெள்ள நிவாரணத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒது‌க்‌கீடு: கருணாநிதி
, வெள்ளி, 5 டிசம்பர் 2008 (13:11 IST)
மாவட்ட ஆட்சித்தலைவர்களுடைய 8ஆம் தேதி கூட்டத்தில் வெ‌ள்ள ‌நிவாரண‌ப் ப‌ணிகளை விரிவாக ஆய்வு செய்து முடிவெடுத்து செயல்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட ம‌க்க‌ள் நிவாரணம் பெறுகின்ற அளவிற்கு அவசர அவசியம் கருதி மேலு‌ம் ரூ.500 கோடி உதவி நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 4.12.2008 அன்று டெல்லி சென்றிருந்த போது, பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை நேரில் சந்தித்து, அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள சேதாரம் பற்றியும், உயிரிழப்பு, பயிரிழப்புகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்ததோடு, முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் உதவி நிதி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதற்கிடையே பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்களின் குழுக்களை அனுப்பி, சேத விவரங்களை நேரில் அறிந்து வரச்சொன்னதின் பேரில், அவர்களும் அவற்றையெல்லாம் அறிந்து வந்து இன்றையதினம் என்னிடத்தில் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

விவசாயிகளின் பயிர் பாழானது மாத்திரமல்லாமல், அவர்களுடைய உடைமைகள், கால்நடைகள், வாழ்வாதார தேவைகளான பல்வேறு தானியங்களும் பாழடைந்து போயிருக்கின்ற செய்தியையும், பெருமளவுக்கு சாலைகள் பழுதடைந்திருக்கின்ற நிலையையும் அவர்கள் விளக்கிக் கூறியிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம், முழுவதும் பாதிக்கப்பட்ட, ஓரளவு பாதிக்கப்பட்ட, குறைவாகப் பாதிக்கப்பட்ட, என்ற மூன்று நிலை பாதிப்புகளையும் கணக் கெடுக்கவும், அதற்கேற்றவாறு நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும், ஆலோசித்து செயல்படுவதற்கு வருகிற 8ஆம் தேதி காலை 10 மணிக்கு, பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் கூட்டியிருக்கிறேன்.

அதற்கிடையே ஆங்காங்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக நிவாரணங்கள் வழங்கப்பட்டதையும், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்றையதினம் அறிந்து கொண்டிருக்கிறேன்.

மாவட்ட ஆட்சித்தலைவர்களுடைய 8ஆம் தேதி கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்து முடிவெடுத்து செயல்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளும், ஏழையெளிய மக்களும், குடிசை வாசிகளும், வீடிழந்தோரும் நிவாரணம் பெறுகின்ற அளவிற்கு அவசர அவசியம் கருதி மொத்தமாக ரூ.500 கோடி மேலும் உதவி நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மத்திய அரசு நம்முடைய கோரிக்கையையேற்று நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரையில் நடைபெற்றுள்ள நிவாரணப் பணிகளையும் இனி நடைபெற வேண்டிய நிவாரணப்பணிகளையும், சீரமைப்புப் பணிகளையும் ஆய்ந்து தொடர்ந்து ஆவன செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil