வங்கக் கடலில் சில தினங்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும், இது மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 2.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து தென்கிழக்கே 1,000 கி.மீ. தொலைவில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதாகவும், இது மேலும் வலுவடைந்து வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் அடுத்த 12 மணி நேரத்தில் அந்தமான் நிக்கோபாரில் பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு : இந்த நிலையில் கடலூர் முதுநகர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல், நாகை, பாம்பன் ஆகியவற்றில் புயல் எச்சரிக்கையாக 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.