தமிழகத்தில் வெள்ளத்தில் இறந்து போன கால்நடைகள், பால் தரும் விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன என்றும் எத்தனை மிருகங்கள் இறந்தாலும், அவை அனைத்துக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் 'நிஷா' புயலால் பாதிப்பு ஏற்பட்டது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
ஊரகப் பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளுக்கு ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். நகரத்தில் குறைந்த வருவாய் பெறும் மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் வீடுகளில் வெள்ளம் புகுந்து இருந்தால், அவைகளும் ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெறுவதற்கு தகுதி உடையவை.
சென்னை, அதன் சுற்றுப்புறத்தில் உள்ள குறைந்த வருவாய் பெறுகிறவர்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
விவசாயிகள், ஆடு, மாடு வளர்ப்போர் உட்பட பல தரப்பினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், புயலால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரூ.100 கோடியை ஆரம்பகட்ட நிதியாக அரசு அளித்தது.
பாதிக்கப்பட்ட ஒரு ஹெக்டேர் நெல் வயலுக்கு ரூ.4 ஆயிரம் என்று இருந்த இழப்பீட்டை அரசு ரூ.7,500 என்று உயர்த்தி வழங்க ஆணையிட்டு உள்ளது. மற்ற பயிர்களுக்கு நில அளவை கணக்கிடாமல், பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும். பாதிக்கப்பட்ட நிலத்தின் அளவுக்கான உச்சவரம்பை கணக்கிடுவது நீக்கப்படுகிறது.
அதுபோல் நிவாரணம் வழங்குவதற்காக, வெள்ளத்தில் இறந்து போன கால்நடைகள், பால் தரும் விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கிடும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. எத்தனை மிருகங்கள் இறந்தாலும், அவை அனைத்துக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.