அ.தி.மு.க ஆட்சியில் பணியில் சேர்க்கப்பட்ட கணினி ஆபரேட்டர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை தி.மு.க அரசு இரவோடு இரவாக டிஸ்மிஸ் செய்தது. எனவே, பணிநீக்கம் செய்யப்பட்ட 6 ஆயிரம் பேருக்கு மீண்டும் தமிழக வேலை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆயிரம் பேர் கணினி ஆபரேட்டர்களாக பணி நியமனம் செய்யப்பட்டார்கள்.
இவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்ட அலுவலர் மூலம் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு கிராமங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
ஊரக வேலை திட்டத்தில் 100 நாள் பணி கேட்டு வருபவர்களுக்கு வேலை அட்டை வழங்குதல், அவர்களை புகைப்படம் எடுத்தல், ஆவணங்களை பராமரித்தல், கிராம நிர்வாகத்தில் தலைவருக்கு உதவியாக இருத்தல் ஆகிய பணிகளுக்கு அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். 100 நாள் வேலை திட்டம் நல்லமுறையில் வளர்ச்சி அடைய பேருதவியாக இருந்தனர்.
ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட பணி என்ற ஒரே காரணத்தால் 2006ம் ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் அனைவரும் தற்போதைய தி.மு.க அரசால் இரவோடு இரவாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள்.
இதனை கண்டித்து அவர்கள் அனைவரும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு கட்டங்களாக நினைவூட்டல் நடத்தினார்கள்.
இதன் விளைவாக, 2006ம் ஆண்டு திருச்சியில் நடந்த அவர்களின் சங்க கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
பாதிக்கப்பட்ட அனைவரும் நடுத்தர, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் அதிகம் பேர் பெண்கள் மற்றும் ஊனமுற்றவர்கள்.
எனவே தமிழக அரசு இது குறித்து பரிசீலனை செய்து அவர்கள் உரிய பலன்பெற ஆவன செய்ய வேண்டும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.