இலங்கையில் போர் நிறுத்தம் செய்யவும், இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தை துவக்குவதற்கு ஏற்பாடு செய்யவும் வலியுறுத்த இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயை சந்தித்து பேசுவார் என்று பிரதமர் தன்னிடம் உறுதியளித்ததாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த அந்த நாட்டு அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமரை சந்தித்து முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை 10 மணிக்கு சந்தித்து பேசினர். பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக அதிபர் ராஜபக்சவை சந்திக்க மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார் என்றும், பிரணாப் எப்போது இலங்கைக்கு செல்வார் என்று நான் மீண்டும் குறுக்கிட்டு கேட்டப்போது, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அவர் இலங்கை செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பிரதமர் உறுதி அளித்திருக்கிறார் என்றார் முதலமைச்சர் கருணாநிதி.
பின்னர் செய்தியாளர்கள் முதலமைச்சர் கருணாநிதியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு :
வெள்ள நிவாரணம் பற்றி பேசினீர்கள்?
தமிழகத்தில் மழைக்கு 177 பேர் பலியாகி உள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக 4 ஆயிரம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சுமார் 8 லட்சம் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. 13 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடி நிவாரண உதவியாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
தமிழகத்தில் இரண்டு டீசல் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள நெமிலியில் ஒன்று அமைக்கப்பட உள்ளது. மற்றொன்று எந்த இடத்தில் அமைக்கப்படுகிறது என்று விரைவில் அறிவிக்கப்படும். இதற்கான செலவை தேவையான உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு பாதி நிதியை நீங்கள் கொடுக்க வேண்டும் மத்திய அரசு கூறியது. அது முடியாது என்று சொல்லிவிட்டோம். தண்டவாளத்தில் பாதி ரயிலை விட முடியுமா என்று கருணாநிதி கூறியபோது சிரிப்பலை எழுந்தது. மத்திய அரசிடம் முடியாது, முழுவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றோம்.
சோனியாகாந்தியை சந்தித்து இலங்கை பிரச்சனை குறித்து பேசினீர்களா?
அனைத்துக்கட்சிக் தலைவர்கள் பிரதமரையும், பிரணாப் முகர்ஜியும் சந்தித்து பேசி இருக்கிறோம். நீங்களும் (சோனியா) ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரம் கேட்டீர்களா?
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தர வேண்டிய மின்சார பங்கீடு இன்னும் வழங்கப்படாமலேயே இருக்கிறது. ஏறத்தாழ 2000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
சென்னை விமான நிலையத்தை பயங்கரவாதிகள் தகர்க்க உள்ளதாக மத்திய உளவுத்துறை தகவல் அனுப்பி இருப்பதை பற்றி?
மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் தேவையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதன் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
நம்பிக்கைத்தான் இந்த இடத்துக்குத் தேவை. அவர், என்னென்ன தேவைகள் என்பதை பற்றி என்னிடம் தொடர்பு கொண்டு பேசுவார்.
அனைத்துக்கட்சி குழுவில் வந்துள்ள சில கட்சியினர் திருப்தி அளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்களே? உங்கள் கருத்து என்ன?
யார் சொன்னது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர். (செய்தியாளர்கள்) இதுதான் பிரதமரை சந்திக்கும் கடைசி சந்திப்பு என்றும் கூறியிருக்கிறார்களே?
இதற்கு கருத்து கூற விரும்பவில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நாங்கள் இலங்கை பிரச்சனையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான். இதற்கெல்லாம் நான் பதில் சொல்லி அந்த ஒற்றுமையை சிதைக்க விரும்பவில்லை.
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததை பற்றி?
அது அவர்களின் உணர்வை காட்டுகிறது.
இலங்கை அதிபர் சமீபத்தில் டெல்லி வந்திருந்தபோது போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறினார். இதற்கிடையில் பிரணாப் முகர்ஜி போவதினால் அவருடைய நிலையில் மாற்றம் வரும் என்று நம்புகிறீர்களா?
நம்பிக்கைத்தான்.
ராஜபக்சே டெல்லியில் இருந்தபோது விடுதலைப்புலிகளை ஒழித்த பிறகே அரசியல் தீர்வு காணப்படும் என்று சொல்லி இருக்கிறார்? இந்த நிலையில் இந்தியா சார்பாக பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு போனால், அதனால் நமக்கு சாதகம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
நீங்கள் (செய்தியாளர்கள்) இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, இருக்க வேண்டாம் என்று நினைக்கிறீர்களா? இருக்க வேண்டும். (செய்தியாளர்கள்) அதுதான் என் கருத்து.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள்? அது பற்றி பிரதமரிடம் என்ன பேசினீர்கள்?
அவர் கொடுக்கவே இல்லை என்று கூறிவிட்டார்.
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதமே கொடுக்கவில்லை என்று கூறிவிட்டது. அது பற்றி நான் என்ன கூறுவது.