கோவை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே விமான நிலையத்தில் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் அது வெறும் புரளி என்று தெரியவந்தது.
கோவை பீளமேட்டில் உள்ள விமான நிலையத்தில் இன்று அதிகாலை சுங்கத்துறை அதிகாரிகள் நிற்கும் பகுதியில் விமான பயணிகளின் பொருள்களை எடுத்து செல்லும் வண்டியில் 'விமானத்தில் இன்று குண்டு வெடிக்கும்' என்று 'சாக்பீசால்' எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி கோவை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மோப்ப நாயுடன் அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், "மெட்டல் டிடெக்டர்'' கருவி மூலம் சோதனை செய்தனர்.
பயணிகள் உடமைகளை கொண்டு செல்லும் தள்ளுவண்டி உள்பட பல இடங்களில் சோதனை போட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதனிடையே சாக்பீசால் எழுதியது யார் என்பது பற்றி கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமிரா மூலம் துப்பு துலக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வால் கோவை பீளமேடு விமான நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.