இதர சமுதாயத்தினரோடு போட்டி போட்டு முன்னுக்கு வர அருந்ததியர் சமுதாயத்துக்கென சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அடித்தளத்தில் அவதிப்படும் அத்தகைய மக்களை ஒரு அரசு சமமாக நடத்தினால் மட்டும் போதாது.
அருந்ததியர்கள் வாழும் இடங்கள் ஊரின் ஒதுக்குப் புறங்களாக உள்ளன. எத்தனையோ முறை முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தபிறகும் கூட இப்போது தான் அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
இதையும், அரசியல் பகடைக்காயாக இருவரும் ஆக்கியிருப்பது உண்மையில் வருத்தம் அளிக்கும் விடயம். உள்ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது. உயர்நிலைக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இந்த 3 விழுக்காடு இடத்தை நிரப்பும் அளவுக்கு அருந்ததிய இளைஞர்களைத் தகுதியுள்ளவர்களாக ஆக்க வேண்டும்.
அவர்கள், இதர சமுதாயத்தினரோடு போட்டி போட்டு முன்னுக்கு வர அவர்களுக்கென சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.