இலங்கையில் போரை நிறுத்த அந்த நாட்டு அரசை மத்திய அரசு உடனடியாக நிர்பந்திக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அனைத்துக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
அப்போது, மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைத்து அங்குள்ள தலைவர்களை சந்தித்து போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தெரிகிறது.
இதே கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வலியுறுத்த அனைத்துக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த ஒரு மணி சந்திப்பின்போது மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்.கே.நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கோ.க. மணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.வி. தங்கபாலு, டி. சுதர்சனம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார், லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் இந்த சந்திப்பின் போதும் உடன் இருந்தனர்.