இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சென்னை விமான நிலையத்துக்கு பலத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் துணை ஆணையர் தலைமையில் ஒரு உதவி ஆய்வாளர், 6 கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் அதிவிரைவு அதிரடிப்படை குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாதிகளின் எந்தவிதமான தாக்குதலையும் சமாளிக்கும் பயிற்சி பெற்றவர்கள்.
விமான நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும், சுற்றியுள்ள பகுதியிலும் கூடுதல் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தின் இரண்டு நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன.
விமான நிலையத்தின் உள்ளேயும், பார்வையாளர்கள் பகுதியிலும் ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து மர்ம நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தின் எதிரே உள்ள மேம்பாலத்தில் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.