இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள மத்திய அரசு சிறிலங்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதுடெல்லியில் இன்று தன்னைச் சந்தித்துப் பேசிய தமிழக எம்.பி.க்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் அப்போது கூறினார்.
புதுடெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த, தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு சிறிலங்க அரசை வற்புறுத்தக் கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாக சென்று சேர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
பின்னர் கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர்கள் வழங்கினர்.
மனு விவரம்: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மனுவை பிரதமராகிய உங்களிடம் அளிக்கிறோம். இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்த நிறுத்தி அரசியல் ரீதியான நல்லதொரு தீர்வை காண்பீர்கள் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் குறித்தும், அப்பாவி தமிழ் மக்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளோம். இலங்கை தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிற்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள்கூட மறுக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது உலகளவில் தமிழ் மக்களை மிகவும் வேதனையடையச் செய்திருக்கிறது. இலங்கை அரசு தமது சொந்த குடிமக்கள் மீது நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்தி, அங்குள்ள 50 லட்சம் இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைகளைப் பெற அரசியல் ரீதியான தீர்வை காண வேண்டும் என்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கோரி வருகின்றனர்.
இலங்கையில் உள்ள பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தமிழக சட்டப்பேரவை அங்குள்ள தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தீர்மானங்களை 23.04.2008, 12.11.2008 ஆகிய தேதிகளில் ஒருமனதாக நிறைவேற்றியது. உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி இந்த தீர்மானங்கள் இந்திய அரசுக்கும் அனுப்பப்பட்டன.
தமிழக முதல்வர் கருணாநிதி 14.10.2008 அன்று அனைத்து கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இதுவரை நடந்திராத அளவில் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்காக பிரம்மாண்டமான மனிதச் சங்கிலி பேரணி ஒன்று 24.10.2008 அன்று நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சார்ந்த மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்புகள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், பேரணிகள் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தின.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று சொல்லி தமிழ் திரைப்பட கலைஞர்களும், தொலைக்காட்சி துறை கலைஞர்களும் பிரம்மாண்டமான பேரணிகளையும், உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும் போது இலங்கை கடற்படை அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதையும், கைது செய்வதையும் கண்டித்து தமிழக மீனவர்களின் துயர் துடைக்கவும் கோரிக்கை எழுப்பப்பட்டது.
இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக நிதியளிக்க சொல்லி தமிழக முதல்வர் பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இலங்கை தமிழர் நிவாரண நிதி ஒரு மாதத்தில் ரூ.37 கோடியை கடந்தது. தற்போது 80 ஆயிரம் தனிநபர் நிவாரணப் பொருட்கள் அடங்கிய முதல் கப்பல் இலங்கையை சென்றடைந்துள்ளது.
இத்தனை நடவடிக்கைகள் மேற்கொண்டும், தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் கேட்டுக் கொண்டவாறு போர் நிறுத்தம் இலங்கையில் மேற்கொள்ளப்படவே இல்லை. இலங்கை அரசு, இலங்கை தமிழினத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. ஆயிரக்கணக்கான தமிழ் குழந்தைகள் மாதக் கணக்காக பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் காடுகளிலும் மலைகளிலும் பதுங்கி தமது உயிரை காப்பாற்றிக் கொள்ள அலைந்து திரிகின்றனர்.
இச்சூழலில் தமிழக முதல்வர் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று திரும்பவும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினார். இலங்கை பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வு காண இந்திய அரசு மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு உரிய மரியாதை அளிக்காததால், போர் நிறுத்தத்தை உடனே அறிவிக்கச் சொல்லி இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று இந்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொண்டது.
எனவே, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், இலங்கை தமிழர்களை காப்பாற்ற, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் போரை உடனே நிறுத்தவும், அங்குள்ள தமிழர்கள் தமது சொந்த மண்ணில் மதிப்புடன் வாழவும், இந்திய அரசு தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் இந்த மனுவை அளிக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.