திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சனிக்கிழமை துர்க்காம்மாள் உற்சவத்துடன் விழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து இன்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தங்ககொடி மரத்தை வலம் வந்தது. தங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு 61 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீபவிழா கொடியேற்றப்பட்டது.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை தரிசித்தனர். பின்னர் பஞ்சமூர்த்திகள், வெள்ளி விமானங்களில் மாடவீதியை வலம் வந்தனர்.
முதல்நாள் திருவிழாவான இன்று இரவு பஞ்சமூர்த்திகள் சின்னரிஷப வாகனத்தில் உற்சவம் நடைபெறும். அதைத் தொடர்ந்து 10 நாட்களும் தினசரி காலை, இரவு நேரங்களில் உற்சவ மூர்த்திகள் மாடவீதியை வலம் வருவார்கள்.
7ஆம் தேதி வெள்ளித் தேர் பவனியும், 8ஆம் தேதி மகாரதம் தேரோட்டமும் நடைபெறும். அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் விநாயகர், முருகன் சுவாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வலம் வரும்.
9ஆம் தேதி மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும். திருவிழாவின் முக்கிய விழாவான மகாதீபம் 11ஆம் தேதி ஏற்றப்பட உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு 2,688 அடி உயரம் உள்ள அண்ணாமலைக்கு உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது அண்ணாமலையார் கோயிலில் அர்த்த மண்டபத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளிப்பார்.