மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.
பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த காவலர்களின் உருவப்படங்களுக்கு நடிகர்கள் ராதாரவி, பார்த்திபன், சத்யராஜ், கார்த்திக், அர்ஜூன், தனுஷ், ஸ்ரீகாந்த், நடிகைகள் ராதிகா, சந்தியா, மும்தாஜ், கீர்த்திசாவ்லா, இயக்குனர்கள் பி.வாசு, வி.சி.குகநாதன், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம.நாராயணன், தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.ராஜன், கலைப்புலிசேகரன் உள்பட ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
வாழ்க பாரதம், வளர்க பாரதம், இனத்தால் மதத்தால், மொழியால் நாம் வேறுபட்டு இருந்தாலும் நம் தேசமக்களின் தாரக மந்திரம் வேற்றுமையில் ஒற்றுமை. அந்த ஒற்றுமையை என்றும் நிலை நாட்டுவோம். ஒன்றுபட்டு பாரதத்தை வலிமையாக்குவோம்.
பாரத தாயின் பிள்ளைகளான நாம் அனைவரும் தாயை நேசிப்பது போல் தாய்நாட்டை நேசிப்போம். தாய்மண்ணை காக்கஇன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், காவல்துறை வீரர்கள் அனைத்து பாரததாயின் பிள்ளைகளுக்கும் கலையுலகை சார்ந்த உங்கள் சகோதர, சகோதரிகளின் வீரவணக்கம். பயங்கரவாதிகளால் உயிர் இழந்த நம் தேசத்து அயல்நாட்டு அப்பாவி மக்களுக்கும் எங்களின் உள்ளார்ந்த உணர்வாஞ்சலி மலராஞ்சலி, கண்ணீர்அஞ்சலி.
இன்று முதல் உறுதி ஏற்போம் இந்தியராக இருப்போம். இந்திய தேசம் காப்போம், மனித வதம் தவிர்ப்போம், மனித நேயம் வளர்ப்போம். வேண்டாம் தீவிரவாதம், வேண்டும் தாயக நேசம், வேண்டாம் பிரிவினை வாதம், வேண்டும் பிரிவில்லா பாரத தேசம், தாய்மண்ணே வணக்கம் என்று கூறியபடி அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.