காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று நடந்த கட்சித்தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் செய்த தியாகத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எப்போது ஆட்சிக்கு வரும் என்று எப்போதும் தன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு இதுதான் பதில் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த குறிக்கோள் மத்தியில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா, அமெரிக்காவுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மின் உற்பத்தி திட்டங்கள் ஏற்பட வழி வகுக்கும்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர வேண்டும் என் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்துள்ளதாகவும் தங்கபாலு கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வி. அருண்குமார் கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒற்றுமையும், ஒழுக்கமும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.