மழைநீர் ஓடிச்செல்ல அமைக்கப்பட்ட வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரக்கமின்றி தமிழக அரசு அகற்ற வேண்டும் என்றும் இனி எந்தக் காலத்திலும் தற்போதுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படவோ, மூடப்படவோ அனுமதிக்கக்கூடாது என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மயான வைராக்யம், பிரசவ வைராக்யம் என்பதுபோல மழைக்கால வைராக்யம் என்றொரு வார்த்தை அரசின் அகராதியில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு முறையும் மழை வரும்போதும் அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதும் இவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் மழை வற்றியவுடன் காணாமல் போய்விடுகின்றன.
கடந்த சில நாட்களாக சென்னையின் பெருவாரியான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி இருந்தன. இதை தவிர்க்க உடனடியாக சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். தெருக்களில் எந்தெந்த பகுதிகளில் அதிகம் தண்ணீர் தேங்கியிருந்தது என்பதை கண்டறிந்து அந்தப் பகுதியில் சாலை நடுவே ஆழ்கிணறு தோண்டி தண்ணீர் நேரடியாக நிலத்தடியில் சேரச்செய்யலாம்.
கிணற்றின் மீது பாதுகாப்பான சிமெண்ட் தளங்கள் தண்ணீரை உள்வாங்கும் வசதியுடன் அமைப்பதன் மூலம் போக்குவரத்துக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தவிர்க்கலாம். தண்ணீர் இல்லாதபோது தவிக்கின்ற தமிழகம், தாராளமாக இயற்கை வாரி வழங்கும்போது சேமித்துக்கொள்ள தவறக்கூடாது.
பல ஏரிகள் உடைப்பு எடுத்தன அல்லது உடைக்கப்பட்டன. உண்மையில் அந்த ஏரிகளின் உண்மையான கொள்ளளவு என்ன, இன்றைய நிலையில் தரைமட்டத்தில் எத்தனை அடி உயரம் சேறு தேங்கியுள்ளது என்பதை கண்டறிந்து ஏரிகளை ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க முடியும்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது என்பது உண்மையா அல்லது வெள்ளம் வந்து தங்க வேண்டிய இடத்தில் வீடுகள் புகுந்தனவா என்பதும் ஆய்வுக்குரிய ஒன்று. எப்போதோ ஒரு முறைதான் பிரச்சனை வரும் என்றாலும் மழைநீர் ஓடிச்செல்ல அமைக்கப்பட்ட வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை இரக்கமின்றி அகற்ற வேண்டும். இனி எந்தக் காலத்திலும் தற்போதுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படவோ, மூடப்படவோ அனுமதிக்கக்கூடாது'' என்று இல.கணேசன் கூறியுள்ளார்.