தேர்தலுக்காக அருந்ததியருக்கான இட ஒதுக்கீட்டு அறிவிப்பை செய்து மக்களை ஏமாற்றும் முயற்சியில் கருணாநிதி ஈடுபடுகிறார் என்றும் அவரது மாய வலையில் யாரும் விழ வேண்டாம் என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3 விழுக்காடு அருந்ததியருக்கு ஒதுக்கப்படும் என்று தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு அரசியல் மோசடி என்றும், நான் ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக பதவியேற்கும் மத்திய அரசிடம் வாதாடி அவர்களுக்கு தேவையான இடஒதுக்கீட்டை பெற்றுத் தருவேன் என்றும் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத கருணாநிதி, நான் அருந்ததியருக்கான இடஒதுக்கீட்டை எதிர்க்கிறேன் என்பது போல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி என்னுடைய கொடும்பாவியை எரிக்குமாறு தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
2001 முதல் 2006ம் ஆண்டு வரை நான் முதலமைச்சராக இருந்த போது எனது தலைமைக்கு எதிரான தி.மு.க அங்கம் வகித்த பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தலைமையிலான கூட்டணி அரசுக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தன. அப்போது நான் எது சொன்னாலும் அதற்கு ஆட்சியாளர்கள் முட்டுக்கட்டை போடுவார்கள்.
ஆனால் கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சியில் இருந்த கருணாநிதி, அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு குறித்து மத்திய அரசை ஏன் வற்புறுத்தவில்லை? அதை பற்றி ஏன் வாய்திறக்கவேயில்லை?
உண்மையிலேயே அவருக்கு அருந்ததியர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் 1999ம் ஆண்டு முதல் 2004 வரை மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி இருந்தபோது செய்திருக்கலாம். அல்லது 2004ல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு அமைந்தவுடன் செய்திருக்கலாம். அல்லது 2006ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொடுத்திருக்கலாம்.
அப்படியிருக்கும்போது ஏன் கருணாநிதி இதற்காக மத்திய அரசை வற்புறுத்தவில்லை? மத்திய அரசின் ஆயுட்காலம் இன்னும் 3 மாத காலத்தில் முடியும் தருவாயில் இது போன்று அறிவித்திருப்பதால் தான் இதை ஓர் அரசியல் மோசடி என்று நான் குறிப்பிட்டேன்.
அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு முறையாக செய்யப்பட வேண்டுமென்றால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே செய்ய முடியும். தேர்தலுக்காக ஓர் அறிவிப்பை செய்து விட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் கருணாநிதி ஈடுபடுவதைத்தான் நான் கண்டிக்கிறேன். அவரது மாய வலையில் யாரும் விழ வேண்டாம்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.