பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் பதவி விலக முன் வந்தும் கூட மத்திய அரசு அதனை ஏற்க மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அவரது பதவி விலகலை மத்திய அரசு ஏற்பதுடன், புதிய புலனாய்வு அமைப்பும் தற்போதைய சூழலில் தேவையற்றது என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த சில நாட்களாக மும்பையில் நடந்த பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து சிவராஜ் பாட்டீல் பதவி விலகி உள்ளார்.
அவருடைய பதவி விலகலை ஏற்றுக் கொண்டு அவருடைய பொறுப்பில் தமிழகத்தைச் சார்ந்த ப.சிதம்பரம் நியமிக்கப் பட்டிருப்பது தமிழினத்திற்கு பெருமை அளிப்பதாக உள்ளது.
இதனால் மத்திய அரசுக்கு குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் தற்போது பதவி விலக முன் வந்தும் கூட மத்திய அரசு அதனை ஏற்க மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
உள்துறை அமைச்சரைக் காட்டிலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் நேரடி பங்களிப்பு மிக இன்றியமையாத ஒன்றாகும். இத்தகைய தாக்குதலுக்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
ஆனால் அவரை நீடிக்க அனுமதித்து விட்டு உள்துறை அமைச்சரை விடுவித்திருப்பது அரசியல் நாடகமாகத்தான் கருத நேரிடும். எனவே அவரது பதவி விலகலையும் அரசு ஏற்க வேண்டும் என்பதுடன் புதிய புலனாய்வு அமைப்பும் தற்போதைய சூழலில் தேவையற்றது எனவும் மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.