விண்வெளி ஆராய்ச்சிக்கு மாணவர்கள் வரவேண்டும் : அண்ணாதுரை வேண்டுகோள்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வரவேண்டும் என சந்திரயான் திட்ட அலுவலர் அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்தார்.
சந்திரயான் 1 திட்ட அலுவலர் அண்ணாதுரைக்கு பாராட்டு விழா சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நடந்தது. விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சுந்தரராமன் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் டாக்டர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
சந்திரயான் 1 திட்ட அலுவலர் அண்ணாதுரை சந்திராயன் 1 குறித்து விளக்கமளித்தார். பின் அவர் பேசுகையில், இந்தியர்கள் படித்துவிட்டு வேலைதேடி அயல்நாடு செல்லவேண்டிய அவசியம் இல்லை. காரணம் நம் நாட்டிலேயே வேலைகள் உள்ளது. அமெரிக்காவில் உள்ள "நாசா' வில் ஒரு செயற்கைகோள் அனுப்ப பத்தாயிரம் நபர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் நம் நாட்டில் உள்ள "இஸ்ரோ'வில் மொத்தமே 13 ஆயிரம் நபர்கள்தான் உள்ளனர்.
ஆகவே கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் விண்வெளி ஆராய்ச்சிக்கு வரவேண்டும். சந்திரயான் 1 தற்போது பல்வேறு படங்களை எடுத்து அனுப்புகிறது. நிலாவில் உள்ள ஹீலியம் 3, பல்வேறு தாசுபொருட்களை அனுப்புகிறது. இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். இந்த தாது பொருட்கள் பூமியில் இல்லை.
ஜப்பான் அனுப்பிய செயற்கைகோள் நிலாவின் பத்து மீட்டர் இடைவெளியில்தான் படம் பிடிக்கிறது. ஆனால் நம் சந்திரயான் 1 ஐந்து மீட்டர் இடைவெளியில் படம் பிடித்து அனுப்புகிறது. சந்திரயான் 2 ரோபட் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது விண்ணுக்கு சென்று மீண்டும் பூமிக்கு வந்துவிடும். மேலும் பல்வேறு இடங்களில் சென்று படம் பிடிக்கும் திறன் பெற்றதாக அமையும்.
சந்திரயான் 3 மூலம் மனிதனை நிலவுக்கு அனுப்பும் முயற்சி நடக்கிறது. இதையடுத்து சந்திரயான் 4 அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளாக கூறினார்.
முன்னதாக சிறப்பு விருந்தினரை கல்லூரியின் முதன்மை அதிகாரி டாக்டர் நடராஜன் அறிமுகம் செய்தார். முடிவில் கல்லூரி மாணவி அபிராமி நன்றி கூறினார். விழாவில் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் டி.ஜி.எம்., மணிவேல், மக்கள் தொடர்பு அதிகாரி குழந்தைசாமி, காமதேனு கலை அறிவியல் கல்லூரி தலைவர் பெருமாள்சாமி, ஏ.வி.டி., நேச்சுரல் புராடக்ட் துணை தலைவர் என்.இளங்கோ, ரோட்டரி சங்க தலைவர் தங்கராஜ், காதர்பாட்சா, லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் பொன்னுசாமி, கவுன்சிலர் வெங்கிடுசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.