மழை வெள்ளத்தால் தமிழகத்தில் 8,700 கிலோமீட்டர் தூரம் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.
கடலூரில் செய்தியார்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உட்பட கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன என்றார்.
தமிழகம் முழுவதும் 8,700 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன என்று தெரிவித்த அமைச்சர், பாலங்கள், சிறுபாலங்கள் என 360ம், 103 இடங்களில் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் மழை வெள்ளத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட ரூ.91 கோடி மதிப்பிடப்பட்டு அரசுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் 706 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளன. சேதமதிப்பு ரூ.60 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. அதை உடனடியாக சரிசெய்யும் பணிகளுக்காக ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.