காடுவெட்டி குரு திருச்சி சிறையில் இருந்து இன்று காலை பிணைய விடுதலையானார்.
அரியலூரில் நடந்த பா.ம.க. கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராஜா, ஆண்டி மடம் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதாக வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டிகுரு மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குரு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஐந்து மாதங்களாக சிறையில் இருந்த காடுவெட்டி குரு இன்று விடுதலையானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குரு மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து குணசேகரன் என்பவரை மிரட்டிய வழக்கில் குருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணைய விடுதலை அளித்தது.
மத்திய அமைச்சரை மிரட்டிய வழக்கில் பிணைய விடுதலைக் கேட்டு அரியலூர் நீதிமன்றத்தில் குரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி விஜயராணி, ரூ.10 ஆயிரத்துக்கு இருநபர் பிணையமும், தேவையான போது அரியலூர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்ற நிபந்தனையுடனும் பிணைய விடுதலை வழங்கி உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து இன்று காலையில் சிறையில் இருந்து குரு விடுதலை செய்யப்பட்டார்.