சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக காவல்துறை ஆணையர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நட்சத்திர ஓட்டல்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலையடுத்து சென்னையில் உள்ள ஓட்டல்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து அனைத்து ஓட்டல் நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற இடம் அளிக்காமல், நவீன பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க ஓட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது என்றார்.
ஓட்டல்களில் ரகசிய கேமராக்கள் பொருத்த வேண்டும். தொலைக்காட்சிகள் மூலம் சந்தேகப்படும் படியான நபர்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்புக்காக முன்னாள் ராணுவத்தினரை பணியில் அமர்த்தலாம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், அருகில் உள்ள சட்டம் - ஒழுங்கு காவல்துறையினருடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களிலும் ஏற்கனவே கமான்டோ படையினர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.