தமிழகத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக ரூ.685 கோடி மதிப்புள்ள பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்ததாகவும், ரூ.368 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்ததாகவும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் சூறாவளி பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.456 கோடி மதிப்புள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாகவும், ரூ.54 கோடிக்கு சாலைகள் சேதமடைந்துள்ளது என்று முதற்கட்டமாக மதிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு நம்வர் மாதம் 337 மி.மீ. மழை பெய்ததாக கூறிய அவர், இந்த ஆண்டு இது 855 மி.மீ. ஆக அதிகரித்துள்ளது என்றும் இங்கு 11 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ஸ்டாலின், தமிழக அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.