''
அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு அறிவிப்பை கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு ஏமாற்று நடவடிக்கையே'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3 விழுக்காடு அருந்ததியருக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்து, அருந்ததிய மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்து வந்த அருந்ததிய மக்கள், புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க. ஆதரவாளர்களான, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அருந்ததிய இன மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசிற்கு அதிகாரமில்லை. "ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், அதன் ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநரைக் கலந்தாலோசித்த பின்னர், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ளவர்களில் இந்த அரசியல் சாசனப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கருதப்பட வேண்டிய சாதிகள், இனங்கள், பழங்குடியினர் மற்றும் சாதி, இனம், குழு ஆகியவற்றின் உட்பிரிவுகள் அல்லது கிளைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு ஒரு பொது அறிவிக்கையின் மூலம் குடியரசுத் தலைவர் வெளியிட வேண்டும்'' என்று இந்திய அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 341-ல் தெளி வாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அறிவிக்கை செய்யப்பட்ட பட்டியலை மாற்றுவதற்கான அதிகாரம் இந்திய பாராளுமன்றத்திற்கு தான் இருக்கிறதேயொழிய, மாநில அரசுக்கு இல்லை.
நான் முதலமைச்சராக இருந்த போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை அருந்ததிய இன மக்கள், ஆதிதிராவிட மக்கள், தேவேந்திரகுல வேளாள மக்கள் என்னிடம் வைத்தனர். அப்போது, அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தேன்.
மாநில அரசால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்ததாலும், அருந்ததிய மக்களுக்கு எதிரான மத்திய அரசு ஆட்சியில் இருந்ததாலும், அப்போது அவர்களது கோரிக்கையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
உண்மையிலேயே கருணாநிதிக்கு அருந்ததிய இன மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்தவுடனேயே இதை செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் ஆட்சிக் காலம் முடிவடையும் தருவாயில், இது போன்ற அறிவிப்பை கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு ஏமாற்று நடவடிக்கையே என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.