சிறிலங்க கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட நான்கு மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் கடந்த 23ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் கரை திரும்பாமல் மாயமானார்கள்.
அவர்களை பாலமுருகன், சுந்தரவேலு, ஜெயபாலன், சசிகுமார் ஆகிய மீனவர்கள் தேடி சென்றனர். இந்த நிலையில் மாயமான 3 மீனவர்கள் ராமேஸ்வரம் அருகே மண்டபம் என்ற இடத்தில் கரை ஒதுங்கினார்கள்.
ஆனால் பாலமுருகன் உள்பட 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் மீன்வளதுறை அனுமதியுடன் 4 விசை படகில் மீனவர்கள் தேடி சென்றனர்.
4 விசை படகும் நடுகடலில் போய்கொண்டு இருந்த போது அவர்களை சிறிலங்க கடற்படையினர் வழி மறித்தனர். அவர்களிடம் விசாரித்த சிறிலங்க கடற்படையினர் 4 பேரை நாங்கள்தான் பிடித்து வைத்து உள்ளோம், அவர்களை தேடி செல்ல வேண்டாம் மீறி சென்றால் கைது செய்வோம் என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மீனவர்களை தாக்கி அவரிடம் இருந்த செல்பேசியை பறித்ததோடு இங்கிருந்து உடனே கரைக்கு போய்விடுங்கள் என்றும் இல்லை என்றால் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் உயிருக்கு பயந்து 16 மீனவர்களும் கரை திரும்பினார்கள்.
இந்த நிலையில் சிறிலங்க கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நான்கு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி ஜெகதாப்பட்டிணம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 300 விசைப்படகுகளும், 1,000 மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.